Friday, August 10, 2018

"அபிஷேகம்…” பற்றிய முழுமையான மெய் விளக்கம்

ஆலயங்களில் தெய்வச் சிலைக்கு முன் படைத்திருக்கும் மலரோ மற்ற உணவாகப் படைத்திருக்கும் பொருள்களோ நல்ல நறுமணங்களைக் கமழச் செய்கின்றது
1.நறுமணமான நற்சுவையின் சத்துக்களை அங்கே படைத்து
2.அந்தத் தெய்வத்திற்கு அபிஷேகிக்கச் செய்து
3.அந்த உணர்வின் நிலைகளை அங்கே பொருதிக் காட்டி
4.அபிஷேகிக்கும் போது நம்மைக் கண்ணுற்றுப் பார்க்கச் செய்கின்றார்கள் ஞானிகள்.

சந்தனத்தை போன்ற மணம் பெறவேண்டும் என்று நாம் ஏங்கினால் அந்த மணத்தின் உணர்வலைகள் நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகின்றது.

மலரின் மணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது இந்த உணர்வின் தன்மை நம் உயிருக்குள் அபிஷேகம் ஆகின்றது.

பன்னீரைப் போன்ற நறுமணம் பெறவேண்டும் என்று எண்ணும் பொழுது அந்த உணர்வுகள் உயிருக்குக் கிடைக்கின்றது.

கனியைப் பார்க்கும் பொழுது கனியைப் போன்ற சுவையான நிலைகள் பெறவேண்டும் என்று வேண்டினால் நற்சுவையின் சத்து நம் உயிருக்குக் கிடைக்கின்றது.

அங்கே காட்டும் பொருள்கள் அனைத்தையும் கண்ணுற்றுப் பார்க்கப்படும் பொழுது அது அனைத்தும் "துவைதம்". பொருளுக்குள் மறைந்த உணர்வின் சத்துகள் அனைத்தும் "அத்வைதம்."

அந்தச் சூட்சும நிலையில் இருந்து (கண்களுக்குப் புலப்படாத சக்திகளிலிருந்து தான்) தான் இந்த மனித உடலைப் பெற்றோம். சுவைத்துப் பார்க்கும் பொழுது அந்தச் சுவையை அறிகின்றோம். நுகர்ந்து பார்க்கும் பொழுது அந்த மணத்தை அறிகின்றோம்.

நல்ல மணத்தைச் சுவாசிக்கும் பொழுதும் சுவையான பதார்த்தத்தை உட்கொள்ளும் பொழுதும் அந்தச் சுவையான நிலைகளும் நறுமணங்களும் உடலான சிவனுக்குள் சேர்கின்றது. அந்த மணமும் சுவையும் உயிரான ஈசனுக்கும் சேர்கின்றது.

சூட்சும நிலைகள் கொண்டு உடலின் தன்மை பெற்றதைத் துவைதம் என்று காட்டினாலும் “அத்வைதம் தான் துவைதம்…!” என்று ஆதிசங்கரர் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

சூட்சும நிலையில் உள்ள சக்திகளை உடலாக எவ்வாறு ஆக்கவேண்டும் என்ற நிலையைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

பாலாபிஷேகமும் தேன் அபிஷேகமும் கனி அபிஷேகமும் சிலைகளுக்குச் செய்தால் அது ஒரு பலனும் தராது.

1.அங்கே அபிஷேகமாகக் காட்டும் பொருளில் நீ பொருளைக் கண்டுணர்ந்து
2.எண்ணத்தால் (சூட்சுமம்) அந்த நறுமணங்களை நுகர்ந்து
3.உடலுக்குள் செலுத்தும் பொழுது உணர்வின் அலையாக உயிர் இயக்குகின்றது.
4.உயிரான ஈசனுக்கும் உடலான சிவனுக்கும் அப்பொழுது அபிஷேகம் ஆகின்றது.

அப்பொழுது அந்த உணர்வின் சத்துக்கள் அனைத்தும் உடலாகச் சிவமாக அமிர்தமாகச் சேர்கின்றது. நம் உடலுக்குள் மகிழ்ச்சியூட்டும் செயலாக அதை நாம் ஆக்கவேண்டும்.

இந்த மகிழ்ச்சி ஊட்டும் உணர்வு உடலாகும் பொழுது அந்த உணர்வின் எண்ணங்கள் நமக்குள் தோன்றி மகிழ்ச்சியூட்டும் செயலை நமக்குள் உருவாக்கும்.

ஒரு கனியை எடுத்துக் கொண்டால் அது நற் சுவையான மணங்களைக் கவர்ந்து… உறைந்து… அது இனிப்பான கனியாக உருவாகின்றது.

ஒரு மலரை எடுத்துக் கொண்டால் அது பல நறுமணங்களின் சத்தை நுகர்ந்து… உறைந்து… நற்பூவாக மலர்கின்றது.

பூக்களிலும் கனிகளிலும் வரும் உணர்வின் சத்தைத் தான் உயிரினங்கள் உணவாக எடுத்து அந்த மணத்தின் எண்ணத்தால் நறுமணத்தையே சுவாசிக்க வேண்டும் என்று எண்ணத்தைத் தனக்குள் வளர்த்து வளர்த்து அந்த உணர்வின் சத்துக்கள் தசையாகி உடலாக விளைகின்றது.

இப்படிப்பட்ட உணர்வின் சத்துக்களை வினையாகச் சேர்த்து வினைக்கு நாயகனாக மனிதனாக வந்துள்ளோம் என்ற நிலைகளை அறிவதற்குத் தான் எழுத்தறிவு இல்லாத அக்காலங்களில் மகா மகரிஷிகள் தான் கண்டுணர்ந்ததைக் காவியமாக வடித்து ஆலயங்களாக உருவாக்கினார்கள்.

1.உயர்ந்த குணங்களைக் கொண்டு நற்பணிகளைச் செய்யும் நிலையும்
2.கெட்டதை நீக்கி நல்லதை உருவாக்கும் நிலையும்
3.மனித உடலிலிருந்து வெளிப்படும் இந்த மணத்திற்குள்
4.(சூட்சுமத்தில்) அனைத்தும் அமைந்திருக்கின்றது என்று உரைத்தார்கள் ஞானிகள்.

பல கோடிச் சரீரங்களில் தீயதை நீக்கி நீக்கி அந்த உணர்வின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கி மனிதனாக வந்த நிலையில் ஒளியின் சரீரம் பெறும் ஆற்றல்களை வளர்த்துக்  கொள்ளும் நிலையை ஆலயங்களில் காட்டி
1.“உயர்ந்த மணத்தின் சத்தை… உன் உடலாக்கு…!” என்றார்கள்.
2.உனக்குள் அந்த நற்சக்திகளைச் செயலாக்கினாய் என்றால்
3.அதுவே தெய்வமாகி தெய்வச் செயலாக உனக்குள் நிற்கும் என்ற நிலையைத் தான்
4.பாமர மக்களும் கண்ணுற்றுப் பார்த்ததும் அந்தச் சக்திகளைப் பெறும் வகையில்
5.தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்கள் அந்த மகா மகரிஷிகள்…!

www.supremeholisticinstitute.com

No comments:

Post a Comment