கடுக்காய் Terminalia chebula
BY Dr.VS.Suresh Phd., Cell :9884380229
காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே
இது கோல் ஊன்றி நின்ற விருத்தன் ,குமரன் ஆக நம் சித்தர்கள் கூறும் வழி.
பழனி தண்டாயுத பாணியை பற்றி கூட அப்படி ஒரு கருத்து உண்டு. அவர் தண்டாயுதபாணி .குமரனுக்கு ஏன் தண்டம் ?
நவபாஷனத்தின் மகிமையை காட்ட விருத்தன் குமானானதால் கோலுடன் அப்படி சிலை வடித்ததாக ஒரு கருத்து சித்தர் மரபில் உண்டு .
உடல் உறுதி பெறவும், நோயற்ற வாழ்வைப் பெறவும், நோய்களைக் குணப்படுத்தவும், ஆரோக்கியம் மேம்படவும், உடல் உள்ளுறுப்புகள் பலப்படவும் உதவக்கூடிய வழிமுறைகளை, இயற்கை நமக்கு வாரி வழங்குகிறது. அதில் மிக மிக சிறப்பு வாய்ந்தது கடுக்காய். கடுக்காய். ஒரு கற்ப மூலிகை .
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
கடுக்காயின் தாயகம் . இந்தியாதான் .ஆனால் அது சீன தாய்லாந்து முதலிய பகுதிகளிலும் கிடைக்கிறது .
இது மிகவும் புராதன மரம்.
புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை அருந்தும்பொழுது ஒரு துளி அமிர்தம் சிந்தியதாம். அத்துளி பூமியில் விழுந்து கடுக்காய் மரமாக உருவெடுத்தது என புராணம் உரைக்கிறது. சுமார் 4000 ஆண்டுகட்கு முற்பட்ட சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடுக்காய் மரம் ஓங்கி உயரமாக வளரும் தன்மை கொண்டது. சுமார் 20 முதல் 25 மீட்டர் உயரத்தில், அரை மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் காணப்படுகிறது. இது குளிர் காலத்தில் இலையுதிர்த்து, மார்ச் மாத வாக்கில் துளிர்க்கிறது. இலைகள் சிறுகாம்புடன் முட்டை வடிவத்துடன் இருக்கும். பூக்கள் பச்சை நிறம் கலந்த வெண்மை நிறமாக, சிறிது மணத்துடன் காணப்படும். காய்கள் பச்சை நிறமுடையதாகவும், முதிரும்போது கரும்பழுப்பு நிறமாக நீண்ட பள்ளங்களுடைய தடித்த ஓட்டோடு காணப்படும். ஓட்டினுள் கொட்டை காணப்படும்.
கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.
ஆனால் உபயோகிக்கும் போது அதை உடைத்து அதில் உள்ளே உட்கொட்டையில் இருக்கும் ஒரு நரம்பை நீக்கவேண்டும் .
அது விஷத்தன்மை உடையது .இதுவே சுத்தி செய்தல் .இது தெரியாமல் கடையில் விற்கும் கடுக்கை போட்டியை வாங்கி உபயோகித்து பின் வருந்துவதில் பலனில்லை .
மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார்.
உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.
கடுக்காய் ஓட்டைத் தூளாக்கி இரவு உணவு உண்டதும் அரை தேக்கரண்டி பொடியைத் தின்று, ஒரு டம்ளர் நீரைக் குடித்துவர உடல் வலுவாகும். வாதம் குணமாகும்.
மூன்று கடுக்காய்த் தோல்களை எடுத்து, தேவையான இஞ்சி, மிளகாய், புளி, உளுத்தம்பருப்பு சேர்த்து எல்லாவற்றையும் நெய்யில் வதக்கி எடுத்து உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் பிசைந்து உண்டு வர, ஜீரண சக்தி கூடும். மலச்சிக்கல் மாறும், உடல் பலம் பெறும்.
கடுக்காய்த்தூளை 10 கிராம் எடுத்து, அதே அளவு சுக்குத்தூள், திப்பிலித்தூள் எடுத்து கலந்துகொண்டு காலை, மாலை அரை ஸ்பூன் வீதம், 21 நாட்கள் சாப்பிட்டு வர, வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
15 கிராம் கடுக்காய்த் தோலை எடுத்து நசுக்கி, 15 கிராம் கிராம்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து, ஆறியபின் அதிகாலையில் குடிக்க நாலைந்து முறை பேதியாகும். அதன்பின் மலச்சிக்கல், வயிற்றுப் பிணிகள் மாறிவிடும்.
200 கிராம் கற்கண்டை தூளாக்கி, நீர் விட்டுப் பாகு போலக் கிளறி, அதோடு 20 கிராம் கடுக்காய்த் தூளைக் கலந்து வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டி தின்று, வெந்நீர் குடிக்க குடல்புண், சுவாச காசம், மூலம், வாதநோய்கள் குணமாகும்.
மூக்கிலிருந்து இரத்தம் வந்தால், சிறிதளவு கடுக்காய்த்தூளை எடுத்து மூக்கால் உறிய, ரத்தம் வருவது நின்றுவிடும்.
10 கிராம் வீதம் கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் எடுத்து பொடியாக்கி சிறிதளவு பொடியை, வெண்ணெயில் குழைத்து, நாக்குப்புண், உதட்டுப் புண்ணில் பூசிவர புண்கள் ஆறும்.
கடுக்காய்க்கு அமிர்தம் என்று பெயர் வழங்குகிறது. கடுக்காயை லேகியம் செய்து உண்ண, நரை, திரை மாறி காய சித்தியாகும்.
இதற்கு ‘அகஸ்த்தியர் ரசாயனம்” என்று பெயர்.
கடுக்காய்த் தோலை மட்டுமே உபயோகிக்க வேண்டும். தோலை சந்தனக் கல்லில் உரைத்து, விழுதைக் காலில் பித்தவெடிப்பு, சேற்றுப் புண் மற்றும் ஆறாத புண்களுக்குத் தடவி உடனடி குணம் பெறலாம். பல்வலி தீர்க்க பற்பசை தயாரிப்பில் சேர்க்கப்படுகிறது.
உப்புச் சுவை தவிர இதர சுவைகள் அனைத்தும் பெற்றது கடுக்காய். கடுக்காயை உப்புடன் சேர்த்து உண்டால் ஐயமும், வெல்லத்துடன் சேர்த்து உண்டால் முன்குற்றமும் நீங்கும். எனினும் செரிப்புத் தன்மை அற்றவர், இல்லறத்தில் ஈடுபட்டோர், பட்டினி கிடந்தோர், கருவுற்றோர், தொண்டையிறுகல் உள்ளோர் பயன்படுத்துதல் ஆகாது. கடுக்காய் பொடி பல் சம்பந்தமான நோய்களை தீர்க்கும். பல் இறுகும். பாலுடன் காய்ச்சி கொடுக்க சீதபேதி நிற்கும். நாள்தோறும் காலையில் கடுக்காய் சாப்பிட்டு வந்தால் நரைமுடி இருக்காது. மேனியில் சுருக்கம் விழாது.
கடுக்காய் மரத்திலிருந்து பிசின் எடுக்கலாம்.
மரப்பட்டை பொடியிலிருந்து மோல்டிங் மாவு தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு தொழில்களுக்கு ஒரு உப மூலப்பொருளாக விளங்கும் டானின் சத்து கடுக்காய்த் தோலிருந்து பெறப்படுகிறது.
தோல் பதனிட டானின் பயன்படுகிறது.
துணிகளுக்குச் சாயமேற்ற, சிமெண்ட் தயாரிப்பு, சிலேட் கற்களுக்கு நிறமூட்ட, நிலக்கரியைச் சுத்தம் செய்ய டானின் உதவுகிறது.
டானின் பிரித்தெடுத்த பின் எஞ்சும் கடுக்காய்ச் சக்கை அட்டைக் காகிதம் செய்யவும், ஒட்டுப்பசை தயாரிக்கவும் பயனாகிறது.
முற்காலத்தில் கட்டடம், கோவில் கட்ட கடுக்காய்ச்சாறு சேர்க்கப்பட்டது.
கடுக்காய் கொட்டையிலிருந்து ஒருவகையான எண்ணெய் எடுக்கப்படுகிறது.
இன்னும் எவ்வளவோ கூறலாம் .இங்கே கூறுபைவை, கூறப் பட்டவை ,இனி கூறப் போவைகள் அனைத்தும் ஒரு அறிமுக நோக்கில் தான் கூறப்படுகிறது .உபயோகிக்கும் போது நிபுணரை ,மருத்துவரை கலந்து உபயோகிக்கவும் .மூலிகைகள் தீங்கிலாதவை என நினைக்கவேண்டாம் .அதிலும் மூலிகை பறிப்பது சுத்தி செய்வது ,பத்தியம் ,அதை தரம் பிரிப்பது ,நேரம் போன்ற பல காரணிகள் உண்டு .
"
கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'--- ஒரு சித்தர் பாடல்
No comments:
Post a Comment